டாடா என்ற ஆலமரம்

Monday, August 24, 2009


மேட்டருக்கு போவதற்கு முன் ஒரு கேள்வி?
சவுரவ் கங்குலி,ரவிசாஸ்திரி,அஜித் அகார்கர் இவர்களுக்குள் கிரிக்கெட் தண்டி ஓர் ஒற்றுமை உண்டு,அது என்ன?

"என்ன டாடா கம்பெனி இங்கிலாந்தின் தரத்துக்கு இரும்புத் தண்டவாளங்களைத் தயாரிக்கப் போகிறதா? சாத்தியமே இல்லை!அப்படி அவர்கள் தயாரித்தால் அதன் ஒவ்வொரு அவுன்சையும் நான் விழுங்கத் தயார்"
சொன்னவர் சர் ப்ரெட்ரிக் அப்காட்.இந்திய ரயில்வேயின் சீப் கமிஷ்னர்.காலம் முதல் உலகப் போர் துவங்கும் சமயம்.
1912 ல் டாடா கம்பெனி 1,500 மைல் இரும்புத்தண்டவாளங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது.அதே வேளையில் அப்போதைய சேர்மன் டோரப் டாடா குறிப்பிட்டது நல்லவேளை அப்காட் தன் வாக்குறுதியை காப்பாற்றவில்லை. இல்லாவிட்டால் எவ்வளவு அஜீரணம் ஏற்பட்டிருக்கும்.
டாடா என்ற ஆலமரத்தின் இரண்டு நூற்றாண்டு வணிகத்தின் ஜாம்ஷெட்ஜி டாடா என்ற வைராக்கிய மனிதன் தான் நாயகன், செல்வா செழிப்பில் பிறந்தும் முதலில் டிரேடிங் ,பிறகு டெக்ஸ்டைல்ஸ் மில் என வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தாலும் மனதளவில் ஒரு தேசியவாதியாக நவீன இந்தியாவை உருவாக்க அவர் கனவு கண்டார்,இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கியபோது கொடுக்கப்பட்ட முதல் பெரிய நன்கொடை இவருடையதுதான்.
விஞ்ஞானமும் தோழில் நுட்பமும்தான் இந்தியாவை முன்னேற்றும் என்று தீர்க்கமாக நம்பினார்.நம்மிடம் உள்ள வளத்தைக்கொண்டே நிலக்கரியையும் இரும்பையும் உற்பத்தி செய்ய வேண்டும் என் விரும்பினார்,நதி நீர் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம் என்றெல்லாம் கனவு கண்டார்.
அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக நனவாக்கியது டாடா குழுமம்.
முதல் இரும்பாலை, முதல் தொழில் நகரம்,முதல் உலகத்தர ஓட்டல்,முதல் விமான நிறுவனம்,முதல் சிமென்ட் பாக்டரி,முதல் தொழிநுட்ப பல்கலைக்கழகம், முதல் கனரக வாகனத் தயாரிப்பு, முதல் காப்பீடு நிறுவனம், முதல் பெரிய ஐ.டி. கம்பெனி, முதல் தேயிலை உற்பத்தி ...இந்த பட்டியல் முழுமையானதல்ல!
டாடா முதலில் கால் பதித்த துறைகள் ஐம்பதைத் தாண்டும்.2003 ன் கணக்கின்படி டாடா குழுமத்தின் மொத்த கம்பெனிகள் 96 ஆகும்.இவை தவிர மிகப் பெரிய சாதனை டாடா குழுமத்திற்கு உண்டு.தொழிலாளர் நலம் என்பது ஏட்டளவில்கூட இல்லாத காலத்தில் அவர்கள் கொண்டுவந்த திட்டங்கள்தான் பல வருடங்கள் கழித்து தொழிலாளர் சட்டங்கள் ஆயின.
ஒரு நாளைக்கு 8 மணி நேர பணி என்பது டாடா 1912 ல் அறிமுகப்படுத்தியது . அது கட்டாயமாக்கியது அரசு 1948 ல்.
1915 ல் இலவச மருத்துவ உதவியை டாடா அறிமுகப்படுத்தியது.அதை 1948 ல் அரசு கட்டாய சட்டமாக்கியது.
1917 ல் தொழிலாளர் நலம் என தனி துறை கண்டது.1948 ல் அரசு சட்டமாக அமலாக்கியது.
1920 ல் பிராவிடண்ட் ஃபண்ட் கொண்டு வந்தது.1952 ல் கட்டாய சட்டமாக்கியது.
1921 ல் .டி.. பயிற்சி/அப்ரென்டிஸ் பயிற்சி முதலில் கொண்டு வந்தது,1961 ல் அரசு சட்டம் கொண்டு வந்தது.
1934 ல் லாபத்தை பகிர்ந்து போனஸ் என்கின்ற திட்டம் கண்டது.1965 ல் அரசு சட்டமாக இயற்றியது.
1937 ல் பணி ஓய்வின்போது கிராஜுவிட்டி கொண்டு வந்தது.1972 ல் அரசு சட்டமாக இயற்றியது.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்......!
ஜெ.என்.டாடா முதல் ஆர்.என்.டாடா வரை பல தலைமுறை மாறுதல்கள் இருந்தாலும் எல்லோரையும் வழிநடத்திச் சென்றது அந்தக் குழுவின் ஆதார நம்பிக்கைகளும் கொள்கைகளும்தான் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.
ஜெ.ஆர்..டி.டாடாவின் முன்னுரை மற்றும் ரத்தன் டாடாவின் பின்னுரை இரண்டும் டாடாவின் உள்மனச் சிந்தனைகளை அறிய வாய்ப்பளிக்கிறது.
ரத்தன் டாடா எம்.டி-யாக பொறுப்பேற்றபின் மும்பயிலிருந்து ஜாம்ஷெட்பூர் பறக்கிறார்.அந்த விமானப் பயணத்தின் போதுதான் தான் செய்ய வேண்டியது என்ன என்று பட்டியல் இட்டார்.எல்லா நிர்வாகத் தலைவர்களும் படிக்க வேண்டிய பாயிண்டுகள் அவை.
1,என் வாழ்க்கையில் என்ன சாதிக்கவேண்டும் என்பதில் தெளிவுவேண்டும்.
2,உண்மை நிலைமை எது என்று அறிய வேண்டும்.
3,மற்றவர்கள் அஞ்சுவதை செய்யத் துணிய வேண்டும்.
4,உயர் அதிகார வட்டத்தை மாற்றி அமைக்கத் தயங்கக்கூடாது.
5,எல்லோரும் சேர்ந்து கனவு கண்டு அதைச் சேர்ந்து சாதிக்கத் திட்டமிடவேண்டும்.
6,இரு வழித் தகவல் பரிமாற்றம் எப்போதும் கிடைக்க தளங்கள் அமைக்கவேண்டும்.
7,ஹெச்.ஆர். சீரமைக்கப் பட வேண்டும்.
8,நம்பகத் தன்மையை ஒருபோதும் இலக்கக் கூடாது.
9,டாடாவின் கொள்கைகளை என்றும் மீறக் கூடாது.
எல்லாம் சரி அது என்ன டாடா கொள்கை?
வரிகளைச் சரியாக கட்டவேண்டும் என்பது டாடாவின் பிடிவாதமான நம்பிக்கை.வரிஏய்ப்பு பற்றி நிதி ஆலோசகர் கூறுகிறார்,நாம் செய்வது சட்டத்துக்கு புறம்பானதல்ல,
ஜெ.ஆர்.டி. டாடா கேட்டார்:சட்டத்துக்கு புறம்பானதல்ல ஆனால் சரியா?
அதுதான் டாடா!!
இந்த நூலின் ஆசிரியர் ஆர்.எம்.லாலா டாடா குழுமத்துக்கு நெருங்கியவராக இருந்தும் துதிபாடும் நடையில் இல்லாமல்,ஆதாரத் தகவல்கள் மற்றும் அறிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளதால் இந்தப் புத்தகம் ஒரு நிர்வாகச் சரித்திர நூலாகப் பரிமளிக்கிறது.
26 ஆண்டுகளுக்கு முன்பு வந்த முதல் பதிப்பு காலத்துக்குத் தக்கவாறு நேர்த்தியுடன் புதுப்பிக்கப் பட்டிருப்பதோடு இந்தி,குஜராத்தி,மற்றும் மராத்தி யிலும் வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலயுள்ள கேள்விக்கு பதில் அனைவரும் டாடாவில் வேலைக்குச் சேர்ந்த பின் தேசத்துக்காக விளையாட வந்தவர்கள்.
இவை THE CREATION OF WEALTH என்ற டாடா பற்றிய புத்தக விமர்சனம்.

Comments

2 Responses to “டாடா என்ற ஆலமரம்”
Post a Comment | Post Comments (Atom)

Maximum India said...

அருமையான பதிவு.

சினிமா விமர்சனங்கள் மட்டுமே அதிகம் காணப் படும் நமது தமிழ் பதிவுலகில் ஒரு நூல் விமர்சனம்!

எனக்கும் கூட நான் படித்த பல புத்தங்களை விமர்சனம் செய்ய ஆவல் உண்டு. நேரம் கிடைக்காமையால் இயலவில்லை. நீங்கள் பதிந்த இந்த கட்டுரை ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாக அமைந்து நமது தமிழ் பதிவுலகில் ஏராளமான புத்தக விமர்சனங்கள் வர வேண்டும் என்பது என் அவா.

உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

டாட்டா குழுமத்தை பற்றி ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம். ஒரே ஒரு விஷயத்தை பற்றி மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஜெ.ஆர்.டி. டாட்டா ஒருமுறை மதர் தெரசா அவர்களை சந்தித்த போது, மனித குலத்திற்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று சொல்ல, அதற்கு பதிலளித்த மதர் தெரசா, "உங்களால் முடிந்த வரை நிறைய பேருக்கு நல்ல வேலை கொடுங்கள்" என்று கூறினாராம். உடனே, பல நிறுவனங்களை தொடங்கிஅங்கு பலருக்கும் நல்ல வேலை வாய்ப்பை கொடுத்து பலருக்கும் சிறந்த வாழ்வை அமைத்து கொடுத்த பெருமை அவருக்கு உண்டு.

பணத்தை மட்டுமே பெரிதாக என்னும் வணிக உலகில் நல்ல குணத்தை கொண்ட டாட்டா குழுமத்தினர் பாராட்டப் பட வேண்டியவர்கள்.

நன்றி ரஹ்மான்!

August 24, 2009 at 7:30 PM

//Maximum India said... //
//எனக்கும் கூட நான் படித்த பல புத்தங்களை விமர்சனம் செய்ய ஆவல் உண்டு.//
எதிர்பார்த்துக் கொண்டிறிக்கிறேன்.
//பணத்தை மட்டுமே பெரிதாக என்னும் வணிக உலகில் நல்ல குணத்தை கொண்ட டாட்டா குழுமத்தினர் பாராட்டப் பட வேண்டியவர்கள்.//
டாடா குழுமம் இந்திய வளர்ச்சியின் மிக முக்கிய பங்கு அளித்திருக்கிறது,மிகச் சரியாக சொன்னீர்கள்,
நன்றி சார்.

August 24, 2009 at 7:57 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails